சீசனிலும் வெல்லம் விலை சரிவு; உற்பத்தியாளர்கள் கவலை
சீசனிலும் வெல்லம் விலை சரிவு; உற்பத்தியாளர்கள் கவலை
ADDED : ஜன 02, 2026 01:55 AM

உடுமலை: பொங்கல் பண்டிகை சீசனிலும், வெல்லம் விலை சரிந்து வருவது உற்பத்தியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பள்ளபாளையம், கொழுமம், மடத்துக்குளம் பகுதிகளில், வெல்லம் உற்பத்தி முன்பு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
விளைநிலங்களில், 'ஆலை' எனப்படும் உற்பத்தி கூடங்கள் அமைத்து தயாரிக்கும் வெல்லம், ஓணம் சீசனில், கேரளாவுக்கும், பொங்கல் சீசனில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும்.
வழக்கமாக, பொங்கல் பண்டிகை சீசனுக்காக, டிசம்பர் மாதத்தில், உற்பத்தியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். அதன் அடிப்படையில், கூடுதல் தொழிலாளர்களை நியமித்து, வெல்லம் உற்பத்தியை அதிகரிப்பது வழக்கம்.
இந்தாண்டு, பொங்கல் சீசன் துவங்கியும், போதிய ஆர்டர்கள் வரவில்லை; விலையும் வழக்கத்துக்கு மாறாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் வரை, 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம், 1,500 ரூபாய் வரை விற்பனையானது.
தற்போது சிப்பம், 1,350 ரூபாயாக விலை குறைந்துள்ளது. இந்த விலை சரிவு வெல்ல உற்பத்தியாளர்களை கவலையடைய செய்துள்ளது.
அவர்கள் கூறுகையில், 'கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், விலை டன், 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், வெல்லம் விலை சரிந்து வருகிறது. வெல்லம் பயன்பாடு குறைவு மற்றும் கேரளா விற்பனை பாதிப்பு காரணமாக நிலையான விலை கிடைப்பதில்லை' என்றனர்.

