'ஜெய் ஸ்ரீராம்'-ஆ? 'ஜெய் ஜெகநாத்'-ஆ?: அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்: அமைச்சர் சிவசங்கர் ஆரம்பித்தார் சர்ச்சை
'ஜெய் ஸ்ரீராம்'-ஆ? 'ஜெய் ஜெகநாத்'-ஆ?: அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்: அமைச்சர் சிவசங்கர் ஆரம்பித்தார் சர்ச்சை
ADDED : ஆக 08, 2024 06:11 PM

சென்னை: 'பிரதமரே ஜெய் ஸ்ரீராம் என்பதில் இருந்து ஜெய் ஜெகநாத் என மாறிவிட்டார், ராமரை கைவிட்டுவிட்டார். முதலில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும்,' எனக் கூறி அமைச்சர் சிவசங்கர் சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ரகுபதி, ''திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான்'' எனப் பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக.,வினருக்கு ஏன் திடீரென ராமர் மீது பாசம் வந்துவிட்டது எனக் கேள்வி எழுப்பினார். பின்னர் அமைச்சர் சிவசங்கர், ''ராமருக்கு வரலாறே கிடையாது'' என்றார். சமீபத்தில் அண்ணாமலை கூறுகையில், ''2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்வார்'' என கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிவசங்கர், ''நாட்டின் பிரதமர் மோடியே இதுவரை கூறிவந்த ஜெய் ஸ்ரீராம் என்பதை ஜெய் ஜெகநாத் என மாற்றி கூற ஆரம்பித்துவிட்டார். அவரே ராமரை கைவிட்டு கட்சி மாறிவிட்டார். எனவே, முதலில் அண்ணாமலை, அப்டேட் ஆகட்டும்'' என கிண்டலாக கூறினார்.. அமைச்சரின் இந்த பேச்சு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.