தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜெயிலர் 2 - விமர்சனம்

ஜெயிலர் 2 - விமர்சனம்

ஜெயிலர் 2 - விமர்சனம்

2


ADDED : அக் 15, 2026 01:24 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 15, 2026 01:24 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயக்கம்: நெல்சன்

நடிப்பு: ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலன், சுராஜ்வெஞ்சாரமூடு, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, நமோ நாராயணா

ஒளிப்பதிவு: விஜய்கார்த்திக் கண்ணன்

இசை: அனிருத்

வெளியான தேதி: அக்டோபர் 15, 2026

நேரம்: 2 மணி 45 நிமிடங்கள்

ரேட்டிங்: 3 / 5

ஜெயிலர் முதற்பாகத்தில் ரஜினியால் கொல்லப்பட்ட வில்லன் விநாயகன் டீம் கொலை வெறியுடன், ரஜினியை தேடி அலைகிறது. அந்த கொலையை செய்தவரை கண்டுபிடித்து பழிவாங்குவேன் என புது வில்லன் சுராஜ்வெஞ்சாரமூடு உறுமுகிறார். கோவாவில் வசிக்கும் சிலை கடத்தல் டான் குடும்பத்தை சேர்ந்த மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, வித்யாபாலனும் தாங்கள் இழந்த பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சிலையை தேடுகிறார்கள். இருவர் பிடியில் சிக்கும் ரஜினிகாந்த் எப்படி தப்பிக்கிறார். எப்படி பதிலடி கொடுக்கிறார். இதுதான் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்2 கதை.

கோவையில் ஒரு சூப்பர் மார்க்கெட் வேலை செய்து கொண்டு மனைவி ரம்யாகிருஷ்ணன், பேரன் ரித்விக், மருமகள் மிர்ணாவுடன் எளிய வாழ்க்கை வாழ்கிறார் ரஜினிகாந்த். அவரை அரசு அதிகாரியான பகவதிபெருமாள், பில்டப் பார்ட்டியான நமோ நாராயணன் ஆகியோர் வம்பு இழுக்க, தனது பாணியில் ரஜினிகாந்த் சில வேலைகளை செய்வதாக படம் தொடங்குகிறது. முதற்பாதியில் காமெடி, கலகல காட்சிகள் அதிகம். வில்லன்கள் சுராஜ்வெஞ்சமூடு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் விளையாட, கதை ஆக் ஷனுக்கு மாறுகிறது. வழக்கம்போல் கெஸ்ட்ரோலில் வரும் நண்பர்கள் உதவியுடன், பக்கா பிளான் போட்டு எதிரிகளை எப்படி பந்தாடுகிறார் ரஜினிகாந்த் என படம் முடிகிறது. சின்ன கதை என்றாலும் பிளாக் காமெடி, ஆக் ஷன், சில பாடல்கள், பில்டப் சீன் கலந்து ஜெயிலர்2வை பக்கா மாஸ், கமர்ஷியல் படமாக கொடுத்து இருக்கிறார் நெல்சன்

ஆரம்பம் முதல் கடைசிவரை சற்றே வயதான தோற்றத்தில் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் இருக்கிறார் ரஜினிகாந்த். அவர் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால், நடிப்பில் பின்னி எடுத்து இருக்கிறார். குறிப்பாக, பகவதிபெருமாளுக்கும் அவருக்குமான பஞ்சாயத்து சீன், தான் யார் என்பதை மறைத்து நமோ நாராயணனிடம் டிரைவராக வேலை பார்க்கும் சீன், யோகிபாபுவை வம்பு இழுக்கும் சீன் செம. இந்த இடங்களில் தனது ஸ்டைல் பிளாக் காமெடி கலந்து கலகலப்பு ஏற்படுத்தி, பல இடங்களில் நன்றாக சிரிக்க வைத்து இருக்கிறார் நெல்சன். ரஜினி படம் முழுக்க ஏகப்பட்ட ஹீரோயிச பில்டப் சீன், அது அவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். இரண்டாம்பாதியில் டான் எஸ்.ஜே.சூர்யா குடும்பத்துடன் மோதுகிற சீனில், பதுங்குவது போல பாய்கிற சீனில் ரஜினிகாந்த் திட்டம் , நடிப்பும் அருமை.

சில இடங்களில் சின்ன, சின்ன காமெடியில், சில டயலாக்குகளில் அப்ளாஸ் வாங்குகிறார் ரஜினிகாந்த். குறிப்பாக, வில்லி வித்யாபாலன் அழகை ரசிக்கும் இடங்கள், எனக்கு அவங்க போனில் குட்மார்னிங் அனுப்பலை என கலாய்க்கும் இடங்கள், அந்த காபி டயலாக் வாவ். நமோ நாராயணாவை மாட்டிவிட்டு அவர் அமைதியாக இருக்கும் இடங்களும் படத்தில் பிளஸ். ஆரம்பத்தில் ஆக் ஷனில் இறங்காமல் இருப்பவர், ஒரு கர்ப்பிணிக்காக துப்பாக்கி துாக்கிக்கொண்டு களம் இறங்கும்போது தியேட்டரில் விசில் பறக்குகிறது. அதேபோல், கோவாவில் மிதுன்சக்வர்த்தி, அவர் குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட சீனிலும் ரஜினி மாஸ் பண்ணியிருக்கிறார். என்ன, இந்த படத்தில் அவர் அதிகம் டான்ஸ் ஆடவில்லை. அதிகம் சண்டைபோடவில்லை. அதிகம் காமெடி பண்ணவில்லை. தான் அமைதியாக இருந்து மற்றவர்களை ஆட வைத்து, நடிக்க வைத்து அழகு பார்த்து இருக்கிறார். வழக்கமான ரஜினியை எதிர்பார்ப்பவர்களுக்கு , அவர் தீவிர ரசிகர்களுக்கு இதெல்லாம் ஏமாற்றம்

கேரள வில்லனாக சுராஜ்வெஞ்சரமூடும், அவர் பாஸ் ஆக வரும் எஸ்.ஜே.சூர்யாவும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். காமெடி கலந்த வில்லத்தனத்தில், மாறுபட்ட கெட்அப்பில் கவர்கிறார் சுராஜ். அவருக்கும் டம்மி பீஸ் நமோவுக்குமான சீன்கள் இன்ட்ரஸ்ட்டிங். யோகிபாபு சம்பந்தப்பட்ட சீன்கள், அவரின் டயலாக், அவர் மாட்டிக்கொண்டு தவிப்பது ரசித்து சிரிக்க வைக்கிறது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்றாலும் தனது கேரக்டருக்கு எஸ்.ஜே.சூர்யா பலம் சேர்த்து இருக்கிறார். அழகான ஹீரோயினாக பார்த்த வித்யாபாலன், இதில் சிகரெட் குடித்துக்கொண்டு வில்லியாக வருகிறார். இடைவேளைக்குபின் அவர் வரும் சீன் அமர்களம். அதேபோல் அதிகம் பேசாவிட்டாலும் டான் ஆக வருகிற பிரபல நடிகர் மிதுன்சக்ரவர்த்தி கேரக்டர், நடிப்பும் பிளஸ்.

முதற்பாகத்தில் ஓரளவு நடித்த ரம்யாகிருஷ்ணன், மருமகள் மிர்ணாவுக்கு அதிக வேலை இல்லை. முதற்பாகம் போலவே சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் கவுரவ வேடத்தில் வருகிறார். அதில் சிவராஜ்குமாருக்கு அதிக சீன். கிளைமாக்சில் மோகன்லாலும் முத்திரை பதித்து இருக்கிறார். ஆனாலும், முதற்பாகத்தில் இவர்களுக்கு இருந்த மாஸ், பில்டப் இதில் இல்லை. இந்தி நடிகர் ஹிர்த்திக்ரோஷனும் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம், கெஸ்ட்ரோலில் நடித்த மாஸ் ஹீரோக்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

வில்லன், ஹீரோ மோதல் என்ற வழக்கமான கதை என்றாலும், போராடிக்காமல் கொண்டு செல்கிறார் நெல்சன். இடைவேளைக்குபின் கொஞ்சம் இழுக்கிறது. அதை அடுத்தடுத்த திருப்பங்கள், ரஜினி ஹீரோயிசம், கிளைமாக்ஸ் சரி செய்து விடுகிறது. ரஜினி மகன் சம்பந்தப்பட்ட சென்டிமென்ட் சீனை குறைத்து இருக்கலாம், இல்லை, இன்னும் உணர்வுபூர்வமாக எடுத்து இருக்கலாம். பேரனை சுற்றிதான் கதை நடப்பதாக போகிறது. ஆனாலும், தாத்தா, பேரன் பாச சீன்கள் குறைவு. ரஜினி படங்களில் பன்ச் டயலாக் அதிகம் இருக்கும். இதில் 50 ஆண்டுகளாக நான் இருப்பது எப்படி தெரியுமா என்ற பன்ச் டயலாக் மட்டுமே ரசிகர்களை ஆரவாரம் செய்ய வைக்கிறது. கிளைமாக்சில் மட்டும் சுருட்டு பிடித்து மாஸ் ஆக வருகிறார். அந்த சுருட்டை தவிர்த்து இருக்கலாமே, சூப்பர்ஸ்டாரே!

அனிருத் பின்னணி இசை, பாடல்கள் படத்தின் இன்னொரு ஹீரோ எனலாம். புதுமையான பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பல சீன்கள் அவர் இசையால் உயிர் பெற்று இருக்கிறது. பின்னணி இசை காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பூர்ணா, நேராபதேஹி பாடலும் சூப்பர் ஹிட். அதேபோல் அவ்வளவு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் விஜய்கார்த்திக் கண்ணன். பல பிரேம் பிரமாதம். சேத்தன் டிசோவின் சண்டை பயிற்சியும் கதையை இன்னும் ஸ்பீடு ஆக்கி ரசிக்க வைத்து இருக்கிறது. ரஜினி அதிகம் சண்டைபோடவில்லை. ஆனாலும் ஆக் ஷன் பட பிலீங் வந்துவிடுகிறது.

முதற்பாகத்தில் இருந்த பல கமர்ஷியல் விஷயங்கள், விறுவிறுப்பு இதில் மிஸ்சிங் என்றாலும், ரஜினியை அதிகம் நடிக்க வைக்கவில்லை என்றாலும், ரசிகர்கள், சினிமா பல்ஸ் உணர்ந்து பக்கா திரைக்கதையுடன், காமெடி ஆக் ஷன், கிளாமர், பில்டப், ஹீரோயிசம், விறுவிறுப்பு, திருப்பங்கள் கலந்து ஒரு வெற்றிபடம் கொடுத்து இருக்கிறார் நெல்சன். கிளைமாக்சில் ஜெயிலர்3 பாகத்துக்கும் லீடு கொடுத்து இருக்கிறார். அதில் விஜய்சேதுபதி என்ன கேரக்டர் என்பது சஸ்பென்ஸ்.

ஜெயிலர் 2 - ஆயுத பூஜை விருந்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us