சமணர்கள் இரவில் தீபம் ஏற்ற மாட்டார்கள்: தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கருத்து
சமணர்கள் இரவில் தீபம் ஏற்ற மாட்டார்கள்: தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கருத்து
ADDED : டிச 17, 2025 06:21 AM

மதுரை: 'சமணர்கள் தங்களின் உயிர் கொல்லாமை கொள்கையால் இருட்டும் முன்பே இரவு உணவை சாப்பிடும் வழக்கம் உடையவர்கள். சமணர்கள் இரவில் தீபம் ஏற்றுவர் என்ற கருத்து தவறானது' என, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கு மேல் முறையீட்டு மனு விசாரணையில், 'இத்துாண் சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. துாணில் சமணர்கள் இரவில் தீபம் ஏற்றுவர். 'அதன் வெளிச்சத்தில் அமர்ந்து சமணர்கள் விவாதிப்பர். அதனால் துாணை ஹிந்துக்கள் உரிமை கோர முடியாது' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவில் தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதுகுறித்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறியதாவது: சமணர்கள் இரவில் தீபம் ஏற்றுவர்; அதன் வெளிச்சத்தில் அமர்ந்து விவாதிப்பர் என்ற கருத்து தவறானது. சமணர்கள் உயிர் கொல்லாமை கொள்கையை தீவிரமாக பின்பற்றி வந்தனர். இருட்டும் முன்பே இரவு உணவை முடித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்கள். விளக்கில் பூச்சிகள் விழுந்து உயிர்க் கொலை ஏற்படும் என தீபம் ஏற்றுவதே இல்லை.
மயிலை சீனி.வேங்கடசாமியின் 'சமணமும் தமிழும்' என்ற நுாலை மட்டுமே வைத்து சமணர்கள் தீபம் ஏற்றுவர் என முடிவிற்கு வர முடியாது. 1858ல் வில்லியம் லாம்டன் என்ற பிரிட்டிஷ் அதிகாரியின் மேற்பார்வையில், சென்னையில் பரங்கிமலை துவங்கி தமிழகம் முழுவதும் மலைக்குன்றுகளில் நில அளவைக்கற்கள் நடப்பட்டன.
கடந்த, 1858ம் ஆண்டிற்கான புவியியல் அறிக்கையை பார்த்தால், இது தெரியும். மதுரையில் திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி, அரிட்டாபட்டி உள்ளிட்ட மலைகளில் நில அளவைக்கற்கள் நடப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

