ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது
ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது
UPDATED : ஜன 31, 2024 04:25 AM
ADDED : ஜன 31, 2024 12:55 AM

சென்னை:புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர்.
30 அம்ச கோரிக்கைகள்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
சரண்டர் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தி.மு.க., அரசை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுதும் ஜாக்டோ ஜியோ சார்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில், டி.பி. ஐ., வளாகம் முன் நடந்த போராட்டத்தில், கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாயவன், அன்பரசு, வெங்கடேசன், உதயகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தி.மு.க., அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வாகன நெரிசல்
போராட்டத்தால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, டி.பி.ஐ., வளாக வாயில் கதவுகள் பூட்டப்பட்டு, நேற்று மாலை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
போராட்டத்தால் கல்லுாரி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது, பலர் கைதாக வராமல், சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி, பஸ்சில் ஏற்றி சமூக நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி, காஞ்சிபுரம், தென்காசி, தஞ்சாவூர், நாகை என, அனைத்து மாவட்டங்களிலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.