ADDED : மார் 17, 2024 07:23 AM
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டட பூமி பூஜையில் பங்கேற்ற தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழரசி ஜல் ஜீவன் திட்டத்தை தங்கள் திட்டம் என பெருமையுடன் கூறினார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் ஜல் ஜீவன் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
இதற்கான நிதியை மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்குகிறது.
திருப்புவனம் அரசு மருத்துவமனை புதிய கட்டட பூமிபூஜையில் எம்.எல்.ஏ., தமிழரசி பேசுகையில்,
''கடந்த பத்தாண்டுகளாக மானாமதுரை சட்டசபை தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை.
தற்போதைய தி.மு.க., அரசின் இரண்டரை ஆண்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் பெருமளவு நடந்துள்ளன. கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், தடையின்றி குடிநீர் விநியோகமும் நடக்கிறது,'' என்றார்.
பொதுமக்கள் கூறுகையில், 'வீடுகள் தோறும் குடிநீர் என்ற மத்திய அரசின் திட்டம் குறித்த விளம்பரம் பிரதமர் மோடி படத்துடன் வந்த வண்ணம் உள்ளது.
மத்திய அரசின் திட்டத்தை கூசாமல் தி.மு.க.,வின் திட்டம் என எம்.எல்.ஏ., கூறுகிறார்,' என்றனர்.

