அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; ஒருவர் பலி; 41 பேர் படுகாயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; ஒருவர் பலி; 41 பேர் படுகாயம்
UPDATED : ஜன 14, 2025 10:23 PM
ADDED : ஜன 14, 2025 06:53 AM

மதுரை: பெரும் எதிர்பார்ப்புகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து சுற்று போட்டிகளும் நடந்து முடிந்தது. இந்த போட்டிகளில் பங்கேற்ற மாடுபிடி வீரர் நவீன் குமார் மாடு முட்டி உயிரிழந்தார். 41 பேர் காயமடைந்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவு பெற்றது. இதில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
குன்னத்தூர் திவாகர் 15 காளைகளையும், முரளிதரன் 13 காளைகளையும் பிடித்து 2 மற்றும் 3ம் இடங்களைப் பிடித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு (ஜன.14) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அறிவித்தபடி இன்று நடந்தது.
போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளைகள் ஏற்கனவே பெற்றிருந்த பதிவு எண்ணின்படி வரிசையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
காளையின் உடல்நிலை எப்படி உள்ளது, அதன் வயது, ஊக்க மருந்து ஏதேனும் பயன்படுத்தப்பட்டு உள்ளதா, கொம்பின் அளவு என்ன என அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே களத்தில் இறக்கிவிடப்பட்டன.
பின்னர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. விதிகளை மீறிய வீரர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதேநேரம், போட்டி விதிகளுக்கு உட்படாத காளைகள், பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
9 சுற்றுகள் முடிவில், மாடுபிடி வீரர்கள் 16 பேர், காளை உரிமையாளர்கள் 13 பேர் உள்பட 41 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த டேவிட் வில்சன் என்பவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.
ஜல்லிக்கட்டை முன்னிட்டு கிட்டத்தட்ட 2000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 888 காளைகள் களத்தில் இறக்கி விட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
அவனியாபுரத்தில் சோகம்:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில், மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன்குமார், 22, உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலையில் இன்று மதியம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை உயிரிழந்தார்.