அனுமதியின்றி ஜல்லிக்கட்டு கூடாது: தமிழக அரசு உத்தரவு
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு கூடாது: தமிழக அரசு உத்தரவு
UPDATED : டிச 18, 2025 11:33 AM
ADDED : டிச 18, 2025 03:37 AM
சென்னை: ''ஜல்லிக்கட்டு உட்பட எந்த போட்டிகளையும், அனுமதி பெறாமல் நடத்தக்கூடாது,'' என, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, கலெக் டர்களுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கலெக்டர்களிடம் முன் அனுமதி பெறாமல், ஜல்லிக்கட்டு உட்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது.
* முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல், போட்டிகள் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
* விலங்கு வதை தடுப்பு சட்டத்தின்படி, காளைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடத்தலாம்.
* அதில் தொடர்புடைய துறைகள் சார்பாக, அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட வேண்டும். போட்டி குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* போட்டி நடக்கும் முன், அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்திருக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை, இணைய வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
* ஜல்லிக்கட்டுக்கு தொடர்பு இல்லாத இடங்களில், போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.
* போட்டி களத்தில் இருந்து, காளைகள் வெளியேறும் இடத்தில், கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருத்தல் அவசியம்.
* இந்த வழிகாட்டு நெறிமுறைகள், வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். இவற்றை பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

