ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.,!
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.,!
ADDED : நவ 24, 2024 06:20 PM

சென்னை: சென்னையில் நடந்த ஜானகி எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பேசியது அ.தி.மு.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா சென்னையில் இன்று (நவ.24) நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சியின் முன்னணி மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை வரவேற்று வழி நெடுகிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மலர்கள் தூவியும், மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனத்துடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜானகி ஆகியோரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை இ.பி.எஸ்., பார்வையிட்டார். மேடையில் அவர்களின் உருவ படங்களுக்கு மரியாதை செய்து, நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார்.
நூற்றாண்டு விழா நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த எம்.ஜி.ஆர்., பேசும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மிகப்பெரிய திரையில் எம்.ஜி.ஆர்., பேசும் வீடியோ ஒன்று ஒளிபரப்பாக தொண்டர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர். அந்த வீடியோவில் அவர் இ.பி.எஸ்.சை பாராட்டி பேசினார்.
சமீபகாலமாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் ஏ.ஐ., மூலம் மறைந்த வி.ஐ.பி.,க்கள் பேசும் டிரெண்ட் பின்பற்றப்படுகிறது. அண்மையில், சென்னையில் நடைபெற்ற தி.மு.க., பவளவிழாவில் கருணாநிதி ஏ.ஐ., மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

