UPDATED : ஏப் 24, 2026 06:33 PM
ADDED : ஏப் 24, 2026 06:10 PM

சென்னை: ஜனநாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரத்தில் அப்படத்தின் எடிட்டராக பணியாற்றிய பிரதீப் ராகவ், சஸ்பெண்ட் செய்வதாக தென்னிந்திய சினிமா எடிட்டர் சங்கம் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய், தனது கடைசி படம் என அறிவித்து நடித்தது ஜனநாயகன் படம். ஆனால், சென்சார் உள்ளிட்ட பிரச்னைகளால் படம் வெளியாகாமல் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு இந்த படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர்கள் ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
படம் இணையத்தில் வெளியானது குறித்து பலரும் ஏதேதோ கருத்துகளை தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் முறையிட்டுள்ளது. இதனிடையே தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், படத்தில் தற்காலிகமாக பணியாற்றிய உமாசங்கர் என்ற வீடியோ எடிட்டர் தான் படத்தை வெளியிட்டது கண்டுபிடித்தனர். அவர் உட்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், படத்தின் எடிட்டராக பணியாற்றிய பிரதீப் ராகவ், தென்னிந்திய சினிமா எடிட்டர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்னிந்திய எடிட்டர் சங்க விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களை பிரதீப் ராகவ், உதவியாளராக பயன்படுத்துகிறார். ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீ்ப் ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
