UPDATED : ஜன 01, 2024 10:01 PM
ADDED : ஜன 01, 2024 01:13 PM
முழு விபரம்

டோக்கியோ: ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று(ஜன.,01) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. மேலும் சுனாமி அலை ஒரு சில பகுதிகளை தாக்கியது. மேலும் பல்வேறு இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்சேதம், உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பசிபிக்பெருங்கடல் பகுதி, ரஷ்யா, வட கொரியாவுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள ஹோன்சு, டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகோ உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயர சுனாமி பதிவாகி உள்ளது. வாஜிமோ, நோட்டோ, ஹோ குரிகு பகுதிகளில் கடல் அலைகள் ஊருக்குள் புகுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பூமிக்கடியில் 10 மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர். நில நடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மின்சாரம் துண்டிப்பு
நிலநடுக்கத்தால் ஜப்பானில் 36 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் சுனாமி அலைகள் 1 முதல் 5 மீட்டர் உயரம் வரை எழும்பியது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுனாமி தாக்கியது. இதனால் மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர்.

அவசர உதவி எண்கள் அறிவிப்பு:
3 நாட்களுக்கு ஏற்படலாம்
ஜப்பானின் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வலுவான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு போன்றவற்றால் வீடுகள் இடிந்து விழுவதற்கான அபாயம் இருக்கிறது. அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு நிலநடுக்கங்கள் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
3 மணி நேரத்தில் 30 முறை
ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அனைத்து நிலநடுக்கங்களும் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகியுள்ளது.