பயங்கரவாதத்தை ஒடுக்க முழு ஆதரவு; ஜப்பான் ராணுவ அமைச்சர் உறுதி
பயங்கரவாதத்தை ஒடுக்க முழு ஆதரவு; ஜப்பான் ராணுவ அமைச்சர் உறுதி
UPDATED : மே 06, 2025 07:55 PM
ADDED : மே 06, 2025 05:30 AM

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சர் நகதானி கண்டனம் தெரிவித்தார்.
கிழக்காசிய நாடான ஜப்பானின் ராணுவ அமைச்சர் ஜெனரல் நகதானி, அரசு முறைப் பயணமாக நம் நாட்டிற்கு நேற்று வந்தார். டில்லியில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், இரு தரப்பு உறவு குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய அமைதிக்கு பங்களிப்பது பற்றியும் இருவரும் விவாதித்தனர். இதேபோல், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ பயிற்சிகளை அதிகரிக்க செய்வது, கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் இருவரும் பேச்சு நடத்தினர். அப்போது நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டிற்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஏவிவிடுவதை, பாகிஸ்தான் அரசு கொள்கையாக வைத்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜப்பான் ராணுவ அமைச்சர் நகதானி கூறுகையில்,
“ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது,'' என்றார்.