sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை அருகே "சேட்டிலைட் டவுன்ஷிப்': முதல்வர் அறிவிப்பு

/

சென்னை அருகே "சேட்டிலைட் டவுன்ஷிப்': முதல்வர் அறிவிப்பு

சென்னை அருகே "சேட்டிலைட் டவுன்ஷிப்': முதல்வர் அறிவிப்பு

சென்னை அருகே "சேட்டிலைட் டவுன்ஷிப்': முதல்வர் அறிவிப்பு


UPDATED : செப் 10, 2011 12:33 AM

ADDED : செப் 08, 2011 11:18 PM

Google News

UPDATED : செப் 10, 2011 12:33 AM ADDED : செப் 08, 2011 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகில், வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமாக உள்ள 311 ஏக்கரில், அனைத்து வசதிகளும் கொண்ட, 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளுடன், 'சேட்டிலைட் டவுன்ஷிப்' அமைக்கப்படும்.

இத்திட்டம், 2,160 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், விதி 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரம் வேகமாக விரிவடைந்து வருகிறது. சென்னையில், வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வீடு வாங்குவது கடினமானதாக உள்ளது. இந்நிலையை கருத்தில்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில், பல்வேறு வீட்டு வசதி திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.



* சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள திருமழிசை அருகே, வீட்டு வசதி வாரியத்திடம், 311.05 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு, முறையான சாலை அமைப்பதற்குத் தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நில உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட உள்ளது. இந்த நிலம் பெறப்பட்ட பின், வீட்டு வசதி வாரியம் சார்பில், 2,160 கோடி ரூபாய் செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்க புரம், வெள்ளவேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய, 'திருமழிசை துணைக்கோள் நகரம்' அமைக்கப்படும்.



* இந்த டவுன்ஷிப், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றும் வசதி, சாலைகள், மழை நீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக் கூடம், பள்ளி, மருத்துவமனை, பஸ் நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைந்ததாக அமைக்கப்படும். இந்நகரத்தில், 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் எளிதில் வாங்கக்கூடிய விலையில் வழங்கப்படும்.



* சென்னை அசோக் பில்லர் அருகில், வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், வாரியத்திற்குத் தேவையான மர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டு, பின்னாளில் அது பயன்பாடின்றிப் போனதால், 15 ஆண்டுகளாக எவ்விதப் பயன்பாட்டிற்கும் உட்படாமல் இருந்து வருகிறது. இந்த காலியிடத்தில், 100 கோடி ரூபாய் செலவில், 554 குடியிருப்புகள் கொண்ட பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.



* கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமத்தில், 5.6 ஏக்கர் காலி நிலம், வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளது. இந்நிலம், கோயம்பேடு பஸ் நிலையத்தை ஒட்டியும், உள் வட்டச் சாலை முகப்பிலும் உள்ளது. இதில், வாரியத்தின் சார்பில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4.66 லட்சம் சதுர அடி பரப்பளவில், பன்னடுக்கு வணிக வளாகம் கட்டப்படும். மேலும், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.44 லட்சம் சதுர அடி பரப்பளவில், 120 குடியிருப்புகளும் கட்டப்படும்.



* சென்னை நந்தனத்தில், வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமாக நிலம் உள்ளது. இதில், 100 கோடி ரூபாய் செலவில், பசுமைத் திட்ட அம்சங்களுடன் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், 17 மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும். இந்தக் கட்டடத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.



மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்வு: முதல்வர் பேசும்போது குறிப்பிட்டதாவது: இந்த ஆண்டு, வீட்டு வசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டாகும். இதையொட்டி, வீட்டு வசதி வாரியத் திட்டங்களின் மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை, மூன்று சதவீதமாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, முதல்வர் தெரிவித்தார். முதல்வரின் அறிவிப்பை, சட்டசபை கட்சித் தலைவர்கள் அனைவரும் வரவேற்றுப் பேசினர். காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், பா.ம.க., உறுப்பினர் கலையரசன் ஆகியோரும், முதல்வரின் அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us