ADDED : பிப் 25, 2024 02:35 AM

சென்னை,:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
காலை 11:04 மணிக்கு அலுவலகம் வந்த, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி, வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அருகிலிருந்த எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஜெயலலிதா பிறந்த நாள் விழா மலரை, பழனிசாமி வெளியிட, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் பெற்றுக் கொண்டார்.
அதன்பின், பழனிசாமி கட்சிக்கொடியேற்றி, கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார். ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார். மருத்துவ முகாமை, பழனிசாமி துவக்கி வைத்தார்.
அவைத் தலைவர் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த, 76 கிலோ எடையுள்ள கேக்கை, பழனிசாமி வெட்டி, கட்சியினருக்கு வழங்கினார்.
அமைப்பு செயலர் ஆதிராஜாராம் ஏற்பாடு செய்திருந்த, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, பழனிசாமி துவக்கி வைத்தார்.
அருகிலிருந்த திருமண மண்டபத்தில், இலக்கிய அணிச் செயலர் வைகைச்செல்வன், இணை செயலர் சிவராஜ் ஆகியோர் ஏற்பாட்டில், 1,000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தமிழகம் முழுதும், அ.தி.மு.க.,வினர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள, ஜெயலலிதா சிலைக்கு, தன் ஆதரவாளர்களுடன் சென்று, மாலை அணிவித்தார்.
சென்னை, மெரினா கடற்கரையில், ஜெயலலிதா நினைவிடத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும், புத்தாடைகள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
தமிழக அரசு சார்பில், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள, ஜெயலலிதா சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவப்படத்திற்கு, செய்தித் துறை செயலர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.