போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி; அறப்போர் இயக்கம் சந்தேகம்
போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி; அறப்போர் இயக்கம் சந்தேகம்
ADDED : டிச 19, 2024 02:29 PM

சென்னை: கூட்டுறவு சங்கத்தில் நீக்கம் செய்யப்பட்ட 44 லட்சம் போலி உறுப்பினர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கடந்த நவ., மாத இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுமார் 44 லட்சம் பேர் போலி உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து, அரசுக்கு, அறப்போர் இயக்கம் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது
1. நீக்கம் செய்யபட்ட 44 லட்சம் உறுப்பினர்கள் பட்டியல் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.2. போலியான 44 லட்சம் உறுப்பினர்களுக்கும் வாழ்நாள் தடை அறிவிக்கவேண்டும்.3. போலியான 44 லட்சம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள், தள்ளுபடிகள் போன்ற தொகைகள் உடனடியாக மீட்கப்படவேண்டும்.4. போலியனவர்களை அங்கீகரித்த நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் செயலர்கள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியாக மற்றும் துணைவிதிகள் அடிப்படையில் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.5. போலியாக அவர்களை அங்கீகரித்த மற்றும் கடன்கள் வழங்கிய, மேலும் முறைகேடாக நகைக்கடன் மற்றும் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிகள் பெற்ற குற்றவாளிகள் மீது முதல் தகவலறிக்கை பதிந்து உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.