'ஆன்லைன்' பண மோசடியை தடுக்க கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைப்பு
'ஆன்லைன்' பண மோசடியை தடுக்க கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைப்பு
ADDED : நவ 19, 2025 05:01 AM

சென்னை: 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் பண மோசடியை தடுக்க, வங்கி அதிகாரிகள், சைபர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து செயல்படும் வகையில், 500 கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நடப்பாண்டில், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்வது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக, 1.22 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன.
இதுதொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், 1,759 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் பண மோசடியை தடுக்க, வங்கி அதிகாரிகள், சைபர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து செயல்படும் வகையில், 500 கூட்டு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சைபர் குற்றங்களை தடுக்க, வங்கி அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் பிறப்பித்துள்ள உத்தரவு:
வாடிக்கையாளர்களின் வருமானம், தொழில், முகவரி போன்ற விபரங்களை முழுமையாக சரி பார்க்க வேண்டும். வாடிக்கையாளர் தெரிவித்த வருமானத்தை விட, அதிகமாக பண பரிவர்த்தனை நடந்தால், உடனே, 'சந்தேகமாக உள்ளது' என, குறிப்பிட்டு விசாரணை நடத்த வேண்டும்
திடீரென பெரும் தொகைக்கு பணப் பரிமாற்றம் நடந்தால், ஒரே நேரத்தில் பல முறை பணம் எடுக்கப்பட்டால், வங்கி செயல்பாடுகளை நிறுத்த, தானியங்கி எச்சரிக்கை முறையை அமல்படுத்த வேண்டும்
வியாபாரத்தின் உண்மைத் தன்மை, வணிக நிறுவனம் செயல்படும் இடங்கள், ஆவணங்களை முழுமையாக சரி பார்த்த பின்னரே, நடப்பு கணக்கு துவங்க வேண்டும்
சைபர் குற்றங்கள் நடந்திருப்பதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல் கிடைத்த உடனேயே, வங்கி அதிகாரிகள் புகார் அளிக்க வேண்டும்
புதிய வகையிலான, சைபர் குற்றங்கள் மற்றும் அவற்றை தடுப்பது குறித்து, வங்கி அதிகாரிகளுக்கு தொடர் பயிற்சி அளிக்க வேண்டும்
மென்பொருள் மற்றும் சர்வர் பாதுகாப்பில், மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்
சைபர் குற்றங்கள் நடந்து இருப்பது தெரிய வந்த உடனே, எப்படி செயல்பட வேண்டும் என, ஒவ்வொரு வங்கிகளிலும் செயல் திட்டம் வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

