திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு
திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு
UPDATED : டிச 18, 2025 05:50 AM
ADDED : டிச 18, 2025 02:56 AM

மதுரை: ''சட்டம் - ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,'' என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு அடிப்படையில், டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும், டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்' என குறிப்பிட்டார்.
மேல்முறையீட்டு மனு
ராம ரவிகுமார், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார்.
இதை அவசர வழக்காக டிச., 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி .ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, டிச., 4ல் தள்ளுபடி செய்தது.
அறிக்கை சமர்ப்பிப்பு
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.
டிச., 9ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மீண்டும் இந்த நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மனுதாரர் தரப்பை மலையேற அனுமதிக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை செல்ல விடாமல் போலீசாருடன் கமிஷனர் தடுத்ததாக துணை கமாண்டன்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்'
'எனவே, தமிழக அரசின் தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் டிச., 17ல் காணொலி மூலம் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.அந்த வழக்கை நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
தலைமைச் செயலர்: முருகானந்தம், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலியில் ஆஜராகினர்.
கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் நேரில் ஆஜராகினர்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், பழனிவேல்ராஜன், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா.கதிரவன், மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகினர்.
தலைமைச் செயலர்: நீதிமன்ற உத்தரவிற்கு மரியாதை தருகிறோம். நிறைவேற்றக்கூடாது என எந்த உள்நோக் கமும் இல்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை , குழப்பமான சூழலில் மேல் முறையீடு செய்யப்படுகிறது. எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றொரு வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் தடை உத்தரவுகளை கலெக்டர்கள் தாங்களாகவே பிறப்பித்தனரா அல்லது அறிவுறுத்தல்களின் படி பிறப்பித்தனரா என்பதை தெளிவுபடுத்த தலைமைச் செயலர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
நிறைவேற்ற வேண்டும்
மற்றொரு வழக்கும் தலைமைச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவ்வழக்கிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணமாக கூறி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே ஆலமரத்துப்பட்டியில் ஒரு சட்ட விரோத சர்ச் கட்டுமானத்திற்கு எதிராக வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினர்.
அந்த வழக்கிலும் நான் பிறப்பித்த தடை உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை. அந்த வழக்கு, இன்று (டிச., 18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் தாசில்தார், 'நீதிமன்ற தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நிலவுகிறது. சட்டம்- - ஒழுங்கு பிரச்னை காரணமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை' என அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
சர்ச் கட்டுமானம் சட்டவிரோதமானது. அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஆனால், கட்டுமானம் தொடர்கிறது. அந்த இடம் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
ஆனால், அதிகாரிகள் அக்கட்டடத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை. அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என்பது குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டியுள்ளது.
நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்து, அதற்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதிக்காமல் அல்லது அது ரத்து செய்யாமல் இருந்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

ஒத்திவைப்பு
சட்டம் - ஒழுங்கு நிலைமையை காரணமாகக் கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அது, அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்கும். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜன., 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

