எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
எஸ்.வி.சேகர் சர்ச்சை பேச்சு வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : டிச 18, 2024 02:57 AM
சென்னை:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, அவதுாறாக கருத்து பதிவிட்ட வழக்கில், எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, அவர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, 2018-ல் சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக, நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.வி.சேகர் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை, சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நேற்று நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வினோத்குமார் ஆஜராகி, ''மனுதாரர் சாதாரண நபர் அல்ல. கல்வி அறிவு பெற்றவர். ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். தவறான ஒரு கருத்தை பதிவிடுவதால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது நன்கு தெரியும்.
தவறுதலாக நடந்தது என்ற வாதத்தை ஏற்க முடியாது. அவரின் பதிவு தனிப்பட்ட நபருக்கானது அல்ல. ஒட்டு மொத்த பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, சிறப்பு நீதிமன்ற தண்டனையை உறுதி செய்ய வேண்டும்; ரத்து செய்யக்கூடாது,'' என்றார்.
எஸ்.வி.சேகர் தரப்பில், 'சமூகவலைதளத்தில் பதிவிட்ட, அந்த பதிவு உடனே நீக்கப்பட்டு விட்டது. தவறுதலான அந்த பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை, விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்யவில்லை.
எனவே, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, விடுதலை செய்ய வேண்டும்' என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.