தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கி நகர்கிறது நீதித்துறை: அட்டர்னி ஜெனரல் கணிப்பு
தொழில்நுட்ப வளர்ச்சி நோக்கி நகர்கிறது நீதித்துறை: அட்டர்னி ஜெனரல் கணிப்பு
ADDED : பிப் 25, 2024 02:12 AM

சென்னை:தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலையின், 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் ரவிதலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் குற்றங்களும் அதிகரித்துள்ளன. அறிவியல் தொழில்நுட்பத்தின் சவால்கள், நீதித்துறையில் நிறைய உள்ளன. எனவே, சைபர் குற்றங்கள் குறித்தும், சட்டம் படிக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாறிவரும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நீதித்துறையும், தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. சட்டம் படிக்கும் மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளையும் கற்றுக் கொள்வது அவசியம்.
கண்காணிப்பு கேமரா, 'பயோமெட்ரிக்ஸ்' மற்றும் 'டேட்டா பேஸ்' உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பங்களின் வாயிலாக, கிரிமினல் குற்றங்கள் மீதான விசாரணைகள் நடந்து வருகின்றன. அதில் கூர்ந்து கவனித்து விசாரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
நம் நாடு பன்முகத்தன்மை கொண்டுள்ளது. சமூக, பொருளாதார கட்டமைப்பில் மற்ற நாடுகளுடன் நாம் வேறுபட்டுஉள்ளோம்.
சட்டம் படிக்கும் மாணவர்கள், இந்திய ஒருமைப்பாடு, தேச நலன், தேசியத்தின் பன்முகத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை படிக்க வேண்டும். அப்போது தான் தெளிவான முடிவை எடுக்க முடியும்.
சமூகத்தில் பொது மனசாட்சி மற்றும் தார்மீக ஒழுங்கின் முக்கியத்துவத்தை அம்பேத்கர் வலியுறுத்தினார். எனவே, சட்டத்தின் ஆட்சியை செம்மைப்படுத்துவதில், நம் பொறுப்பும், ஈடுபாடும் அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், பல்கலை துணை வேந்தர் சந்தோஷ்குமார் வரவேற்றார். சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, பல்கலை பதிவாளர் கவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில், 22 மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்கான முனைவர் பட்டங்களும், 98 மாணவர்கள் முதுநிலை மற்றும் இளநிலை சட்ட படிப்பிற்கான பட்டங்களும் பெற்றனர். பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில் தேர்ச்சி பெற்ற, 6,246 பேர் பட்டம் பெற்றனர்.