கங்குவா பற்றி 'நெகடிவ் கமென்ட்' : திட்டமிட்ட சதி என ஜோதிகா ஆவேசம்
கங்குவா பற்றி 'நெகடிவ் கமென்ட்' : திட்டமிட்ட சதி என ஜோதிகா ஆவேசம்
ADDED : நவ 18, 2024 01:28 AM

சென்னை: 'நடிகர் சூர்யா நடித்துள்ள, கங்குவா படம் குறித்து, சில கும்பல் திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்பியது வருத்தம் அளிக்கிறது' என, நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நான் நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல; ஒரு சினிமா ரசிகையாக இதை எழுதியுள்ளேன். கங்குவா படம், சினிமாவில் ஒரு அதிசயம். ஒரு நடிகனாக, சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயலும் சூர்யாவை நினைத்தால், மிகவும் பெருமையாக உள்ளது.
கங்குவா படத்தில், நிச்சயமாக முதல் 30 நிமிடம், 'ஒர்க் அவுட்' ஆகவில்லை; சத்தமும் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு படத்திலும் குறைகள் என்பது ஒரு அங்கமாக இருக்கும்.
கங்குவா போன்ற பரிசோதனை முயற்சியில் எடுக்கப்படும் படங்களில், அது இருப்பது நியாயமானது.
அதுவும் மூன்று மணி நேரத்தில், வெறும் அரை மணி நேரம் மட்டுமே குறைகள் இருப்பதாக தோன்றுகிறது.
மற்றபடி, உண்மையாகவே, அது தரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளது. தமிழ் சினிமாவில், இது போன்ற ஒரு ஒளிப்பதிவை, இதற்கு முன் பார்த்ததில்லை.
ஊடகங்கள் மற்றும் சினிமா சார்ந்தவர்களிடம் இருந்து, இந்த அளவுக்கு, 'நெகடிவ்' விமர்சனங்கள் வருவதை பார்த்து, நான் மிகவும் ஆச்சர்யம் அடைந்தேன்.
பழைய கதையுடன் பெண்களை இழிவாக காட்டி, இரட்டை அர்த்த வசனங்கள் பேசி, அதிக சண்டை காட்சிகளுடன், இதற்கு முன் வந்த பெரிய படங்களுக்கு எல்லாம், இதுபோன்ற ஒரு நிலை இருக்கவில்லை. கங்குவா படத்தில் உள்ள, 'பாசிடிவ்' என்னாச்சு.
இரண்டாம் பாதியில் உள்ள பெண்களின் சண்டை காட்சி, சிறுவனுக்கு கங்குவா மீதுள்ள அன்பும், பகையும் குறித்து ஏன் சொல்லவில்லை. நல்ல நல்ல காட்சிகளை விமர்சனத்தில் கூற மறந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
வியத்தகு காட்சிகளுடன், கங்குவா படத்தை, '3டி' தொழில்நுட்பத்துடன் கொடுத்துள்ளவர்களுக்கு, கைதட்டலும், பாராட்டும் கிடைக்க வேண்டிய நிலையில், படம் ரிலீசாகி முதல் காட்சி முடியும் முன்னரே, சில கும்பல்களால் இந்த அளவு எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது, மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கங்குவா படக்குழுவினரே, நீங்கள் பெருமையாக இருங்கள். 'நெகடிவ் கமென்ட்' அடிப்பவர்கள் அடித்துக் கொண்டே இருக்கட்டும். அவர்களால் அதுதான் செய்ய முடியும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.