ADDED : பிப் 13, 2024 07:28 AM

திருப்பூர் : 'தி.மு.க., - எம்.பி., வில்சன், தன்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு உண்மையாக இல்லை. இவர் சார்ந்திருக்கும் கட்சிக்கு, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்' என்று, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: தி.மு.க., - எம்.பி., வில்சன், கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதை, அவர் மக்கள் நலனுக்காக செய்யவில்லை. அவர் எழுதிய கடிதம், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக வரும் வெளிநாட்டு உதவியை கோருவதாகும்.
தமிழர்கள் தந்த எம்.பி.,பதவி என்ற அங்கீகாரத்தை, வெட்கமின்றி இவருடைய மத விசுவாசத்துக்கு பயன்படுத்துகிறார். வெளிநாட்டில் பெறப்படும் நிதிக்கு உரிய கணக்கு காட்டாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது தெரிந்தும், இப்படி கடிதம் எழுதுகிறார்.
அரசின் உபயோகத்துக்கு ஹிந்து கோவில் நிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு, மற்ற மதத்தின் ஆலய இடங்களை அப்படி அபகரிப்பதில்லையே ஏன்?
எம்.பி.,யின் விசுவாசத்துக்கு, இரு காரணங்களில் ஒன்று, தேர்தல் நெருங்கும் நேரம் மத்திய அரசு, கிறிஸ்துவர்களுக்கு எதிராக இருக்கிறது என்ற தோற்றத்தை அழுத்தமாக பதிவு செய்யும் முயற்சியாகும்.
இரண்டாவது, தி.மு.க.,வுக்கு தேர்தலில் செலவு செய்ய, அக்கட்சியினர் வெளிநாட்டில் பதுக்கியுள்ள நிதி, கிறிஸ்துவ நிறுவனங்கள் மூலம் சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் வருவது தடைபடுகிறது என்பது.
இதை உளவுத்துறை கண்டுபிடிக்க வேண்டும். வில்சன் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை. வரும் தேர்தலில், இப்படிப்பட்டவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.