தி.மு.க.,வை மிரட்டி 'சீட்' பெற மாநாடு நடத்தவில்லை: திருமா
தி.மு.க.,வை மிரட்டி 'சீட்' பெற மாநாடு நடத்தவில்லை: திருமா
ADDED : செப் 13, 2024 04:55 AM

விழுப்புரம்: ''பா.ம.க., மற்றும் பா.ஜ., உடன் எப்போதும் அணி சேர முடியாது,'' என வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
புதுச்சேரி மண்டல வி.சி., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: வி.சி., சார்பில், மது ஒழிப்பு மாநாடு, உளுந்துார்பேட்டையில் நடத்த உள்ளோம். தி.மு.க.,வை மிரட்டி, கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசுவதற்காக இந்த மாநாடு நடப்பதாக சிலர் கூறுகின்றனர். அதனால்தான், அ.தி.மு.க.,வை அழைத்ததாகவும் பேசி, அரசியல் முடிச்சு போடுகின்றனர்.
மது ஒழிப்பு குறித்து, 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். 2016ல், மக்கள் நல கூட்டணி மூலம் மதுவிலக்கு பிரசாரம் செய்தேன். கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் 69 பேர் இறந்தது தான், இந்த மாநாடு நடத்துவதற்கான தொடக்கப்புள்ளி. இது தேர்தலுக்காக நடத்தப்படுவது அல்ல. தேர்தல் கணக்கு போட்டு எதையும் செய்ய மாட்டேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, 'சீட்' குறித்து சிந்திப்பேன்.
மதுவிலக்கு கொள்கையுள்ள காந்தி பிறந்த நாளில் மாநாடு நடக்கிறது. காங்., செய்ய வேண்டிய வேலையை வி.சி., செய்கிறது. மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்க வேண்டும். மது ஒழிப்பு, பெண்களின் குரலாக இருக்க வேண்டும்.
இது ஒரு கட்சியின் மாநாடு அல்ல. அனைவருக்குமான பொது கோரிக்கை. மதுவை ஒழிப்போம் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க, இடசாரிகள் என உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டும். பா.ம.க., மற்றும் பா.ஜ., உடன் எப்போதும் அணி சேர முடியாது.
தி.மு.க.,வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக, தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டும். அதற்காக, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர். அதற்கு காரணம் மது. தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், முதல்வரிடமே மனு கொடுக்கலாமே என்கின்றனர். இது மக்களே ஒன்று சேர்ந்து, கேட்க வேண்டிய கோரிக்கை. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.