கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ., உறுதி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ., உறுதி
ADDED : ஏப் 15, 2025 01:40 PM

சென்னை: ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும்'' என சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள் என, 24 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்றக்கோரி அ.தி.மு.க., - பா.ம.க., தே.மு.தி.க.,பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி கடந்தாண்டு நவ., 20ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) இந்த வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும்'' என சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல் தெரிவித்துள்ளது.