கள்ளச்சாராயம் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை?: வழக்கு ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
கள்ளச்சாராயம் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை?: வழக்கு ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 26, 2024 02:17 PM

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க, மற்றும் பா.ம.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தக் கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் பா.ம.க சார்பில், வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (ஜூன் 26) பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். அதனால் வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்” என வாதிட்டார். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.