கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2400 பேர் மட்டுமே வைகையில் இறங்க அனுமதி
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2400 பேர் மட்டுமே வைகையில் இறங்க அனுமதி
UPDATED : ஏப் 22, 2024 02:33 PM
ADDED : ஏப் 22, 2024 01:52 PM

மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை (ஏப்.,23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். இது குறித்து மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நாளை கள்ளழகர் வைகையில் இறங்கும் இடத்தில் விஐபிகளுக்கு 2400 பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும். பவர் பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சினால் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

