ADDED : பிப் 11, 2025 05:23 AM

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே தவறுதலாக பஸ் மாறி ஏறிய கல்லுாரி மாணவி, ஓடும் பஸ்சில் இருந்து அவசரமாக இறங்கியபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.
கடலுார் மாவட்டம், வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் குணவதி, 18, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி.
இவர், நேற்று பெரம்பலுார் மாவட்டம், பாடாலுாரில் நண்பரின் அக்கா திருமணத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும், தன் ஊருக்கு செல்ல மதியம் 1:30 மணிக்கு, பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில், கடலுார் செல்லும் பஸ் என நினைத்து, திருச்சி செல்லும் அரசு பஸ்சில் தவறுதலாக ஏறிவிட்டார்.
ஓடும் பஸ்சில் இருந்து அவசரமாக கீழே இறங்கும்போது, தவறி விழுந்ததில் பின்தலையில் அடிபட்டு, குணவதி படுகாயமடைந்தார். பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழியிலேயே இறந்தார்.