சாம்சங் தொழிலாளர்களுக்கு ரூ.23000 வரை ஊதிய உயர்வு; முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சாம்சங் தொழிலாளர்களுக்கு ரூ.23000 வரை ஊதிய உயர்வு; முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : மே 19, 2025 05:15 PM

சென்னை; சாம்சங் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான பிரச்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, தொழிலாளர்களுக்கு ரூ.23000 வரை ஊதிய உயர்வு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்களுக்கும், சாம்சங் நிறுவனத்துக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன.
தொழிற்சங்கத்தின் பதிவு, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆகிய விவகாரங்களில் ஊழியர்களுக்கும், ஆலை நிர்வாகம் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந் நிலையில் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் பேசியதாவது; பிரச்னை சமூகமாக முடிக்கப்பட்டு இருக்கிறது. நிர்வாகமும், தொழிலாளர் சங்கமும் ஒத்து கொள்ளக்கூடிய வகையில், ஊதிய உயர்வானது 2025-26ம் ஆண்டில் ஒரு தொழிலாளிக்கு ரூ.9000, 2026-27ல், 2027-28 இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.4000, ரூ.4500 வழங்குவது என இருதரப்பும் ஒத்துக்கொண்டனர்.
இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு ரூ.23000 கிடைக்கும். இரு தரப்பினரும் முழுவதுமாக இதை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது ஊதிய உயர்வு பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட 25 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்த நடவடிக்கையை தொழிலாளர் நலத்துறை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி. கணேசன் கூறினார்.