ADDED : ஜூலை 15, 2025 06:42 AM

'கன்னடத்து பைங்கிளி'
கடந்த 1955ல் துவங்கிய சரோஜா தேவியின் திரைப்பயணம், 65 ஆண்டுகள் நீடித்தது.
சிறுவயதிலேயே நடனம், பாடலில் பயிற்சி பெற்றார். 17வது வயதில், 1955ல் மகாகவி காளிதாசா கன்னட படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது வென்றது. தமிழில், 1957 ஜூன் 29ல் வெளியான தங்கமலை ரகசியம் படத்தில் அறிமுகமானார். 1958ல் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகில் பிரபலமானார். சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்தார்.
திருமணத்துக்கு பின்...
கடந்த, 1967ல் இன்ஜினியர் ஸ்ரீஹர்ஷாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகும் நடித்தார். 1984 வரை கதாநாயகியாக வலம் வந்தார். பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். விஜயகாந்த், அர்ஜுன், விஜய், சூர்யா உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்தார். 2019ல் கன்னடத்தில் வெளியான நட சார்வபவுமா படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தார். இதுவே இவரது கடைசி படம்.
சரோஜா தேவி 1938 - 2025
இயற்பெயர் : ராதா தேவி
பிறப்பு : 1938 ஜன., 7,
இடம் : பெங்களூரு, கர்நாடகா
குடும்பம் : கணவர் ஸ்ரீஹர்ஷா, மகள்கள் புவனேஷ்வரி, இந்திரா, மகன் ராமசந்திரன்
மறைவு : 2025 ஜூலை 14
விருது
1965 - 'அபிநய சரஸ்வதி' பட்டம் - கர்நாடக அரசு
1969 - பத்ம ஸ்ரீ
1992 - பத்ம பூஷண்
2008 - மத்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது
2006 - பெங்களூரு பல்கலை டாக்டர் பட்டம்
2009 - தமிழக அரசின் கலைமாமணி விருது
எம்.ஜி.ஆருடன் 26 படம்
நடிகர் எம்.ஜி.ஆருடன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை உட்பட 26 படங்களில் ஜோடியாக நடித்தார். சிவாஜியுடன் 22 படங்களில் இணைந்து நடித்தார்.
அழகான மச்சம்
சினிமாவில் நீச்சல் உடைகளை தவிர்த்தார். இவர் அணியும் ஆடை, அணிகலன், மேக்கப், ஹேர் ஸ்டைல் உள்ளிட்டவை அன்றைய பெண்களை ஈர்த்தன. கன்னத்தில் இருந்த மச்சம் இவரது அழகை கூட்டியது.
இவருக்கு தான் நடித்ததில் பிடித்த படம் இருவர் உள்ளம் (1963).