கேள்வி கேட்கும் அதிமேதாவிகள்: குமரியில் முதல்வர் காட்டம்
கேள்வி கேட்கும் அதிமேதாவிகள்: குமரியில் முதல்வர் காட்டம்
ADDED : டிச 31, 2024 11:40 AM

கன்னியாகுமரி; கன்னியாகுமரியில் ஒரு வள்ளுவர் சிலை அமைத்ததற்கு வெள்ளி விழாவா என்று அதிமேதாவிகள் கேட்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்து வெள்ளி விழா சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;
திருக்குறளாகவே வாழ்ந்தவர் கருணாநிதி. அவரின் எண்ணத்துக்கு உயிர் கொடுத்தவர் ஸ்தபதி. வள்ளுவர் சிலை தொடங்கி கருணாநிதியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சிலை அமைத்ததற்கு எதற்கு வெள்ளி விழா என்று சில அதிமேதாவிகள் கேட்கின்றனர்.
12 கோடி ரூபாய் செலவில் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை பறை சாற்றக்கூடிய வகையில் 3டி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.
முதல் படகுக்கு காமராஜர் பெயரும், 2வது படகுக்கு மார்சல் நேசமணி பெயரும், 3வது படகுக்கு ஜி.யு. போப் பெயரும் வைக்கப்படும். கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். திருக்குறள் தொடர்பான கலை, இலக்கிய அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும்.
திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டிருப்பது போல தனியார் நிறுவனங்களிலும் எழுத ஊக்குவிக்கப்படும். ஆண்டுதோறும் திருக்குறள் மாநாடு நடத்தப்படும். திருக்குறளும், திருவள்ளுவர் சிலையும் நம் வாழ்க்கையை காக்கும் கேடயம். நம்மை அழிக்க நினைக்கும் தீமைகளை தடுக்கும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.