ADDED : அக் 04, 2024 08:20 PM
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய, அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இது தவிர, தமிழகத்தில் ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டம், வேலுாரில் நீரேற்று மின் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்துார் விமான நிலைய திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த, அதானி குழுமம் ஆர்வம் காட்டுகிறது.
இந்நிலையில், அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகனும், அதானி போர்ட்ஸ் அண்டு எஸ்.இ.இசட்., நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான கரண் அதானி, சென்னையில் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பு, துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் உதயநிதி, துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தும், அவருடைய நிர்வாகத்தில் தமிழகம் சிறப்புறும் என்றும் அனில் அதானி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.