கராத்தே மாஸ்டருக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு
கராத்தே மாஸ்டருக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைப்பு
ADDED : ஆக 30, 2025 06:33 AM
சென்னை :பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே மாஸ்டருக்கு விதிக்கப்பட்ட, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை, நிறுத்தி வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை அண்ணாநகரில், தற்காப்பு கலை பயிற்சி மையத்தை நடத்தி வந்தவர் கெபிராஜ், 41. இவருக்கு எதிராக, பயிற்சி பெற்ற மாணவி ஒருவர், பாலியல் புகார் அளித்தார். கெபிராஜை போலீசார் கைது செய்தனர். பின், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது .
இந்த வழக்கை விசாரித்த, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், கெபிராஜ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து, சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கெபிராஜ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என, கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கெபிராஜ் தரப்பில், 'மனுதாரர் எந்த மாணவிக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை. பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் விதித்துள்ள, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.