ரூ.50 ஆயிரம் லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கைது
ரூ.50 ஆயிரம் லஞ்சம்: காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கைது
ADDED : டிச 04, 2025 05:47 PM

காரியாபட்டி : ஒப்பந்த பணிக்கான தொகையை கொடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் கணேசன், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த முதல் நிலை ஒப்பந்ததாரர் பழனிக்குமார் 42. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் ஒப்பந்தம் எடுத்து பணி செய்தார். இதற்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 160 தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்க கேட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார். ஆனால் மீதித் தொகையை கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். மீதத்தொகையை விடுவிக்க ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என இளநிலை பொறியாளர் கணேசன் கேட்டார்.
இதனை கொடுக்க மனமில்லாத பழனிக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசாரின் அறிவுரைப்படி பணம் தர ஒப்புக்கொண்டார். இதையடுத்து இன்று(டிச.,04) காலை 10 மணிக்கு, அலுவலகத்தில் இருந்த கணேசனிடம் முன் பணமாக ரூ. 50 ஆயித்தை கொடுத்தார். மறைந்திருந்து ஏ.டி.எஸ்.பி .,ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜாஸ்மின் மும்தாஜ் , பூமிநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கணேசனை கைது செய்தனர். பணத்தை கைப்பற்றி, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

