ராகுல் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு கார்கே அழைப்பு
ராகுல் யாத்திரையில் பங்கேற்க திருமாவளவனுக்கு கார்கே அழைப்பு
ADDED : ஜன 17, 2024 05:14 AM

ராகுல் யாத்திரையில் பங்கேற்க, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையை, காங்., முன்னாள் தலைவர் ராகுல் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 14ம் தேதி, மணிப்பூரில் துவங்கிய யாத்திரை, 15 மாநிலங்களில், 67 நாட்கள், 6,712 கி.மீ., துாரம் நடக்க உள்ளது. மார்ச் 20ல், மும்பையில் யாத்திரையை, ராகுல் நிறைவு செய்கிறார்.
ஒற்றுமை யாத்திரையில் ராகுலுடன், வட மாநில, தென் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 'இண்டியா' கூட்டணி தலைவர்களும், ராகுல் யாத்திரை மேற்கொள்ளும் மாநிலங்களில் பங்கேற்க வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் கார்கே விருப்பம் தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீஹாரில் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து, கார்கே கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், 'உங்களுக்கு வசதியான தேதி மற்றும் இடத்தில், நீங்கள் யாத்திரையில் பங்கேற்கலாம். நான் எதிர்பார்க்கிறேன்.
'யாத்திரையின்போது உங்களின் பங்கேற்பும், ஆதரவும் மீண்டும் ராகுலின் எழுச்சிக்கு உந்துதலாக இருக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.
ராகுலின் முதல் கட்ட பாதயாத்திரையை, கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். காஷ்மீரில் நடந்த நிறைவு நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.
ராகுலின் 2வது யாத்திரையில் பங்கேற்க, தி.மு.க., தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், யார் பங்கேற்பார் என்பது முடிவாகவில்லை.
- நமது நிருபர் -

