'கர்நாடக காங்., அரசு செயல்களை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு'
'கர்நாடக காங்., அரசு செயல்களை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு'
ADDED : பிப் 18, 2024 03:43 AM

சென்னை : காவிரியில் மேகதாது அணை கட்ட, கர்நாடக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதற்கும், கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்களை வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசுக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நேற்று முன்தினம் கர்நாடக பட்ஜெட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டி, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, ஒரு தனி திட்டப்பிரிவு மற்றும் இரண்டு உட்பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. உயர் அதிகாரிகளிடம் தேவையான அனுமதிகளைப் பெற்று, பணிகளை விரைந்து துவக்க, முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருணாநிதி, சர்க்காரியா கமிஷன் விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு பயந்து, கர்நாடகா காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட அனுமதித்து, தமிழக மக்களை வஞ்சித்ததைப் போல, இன்று முதல்வர் கர்நாடகாவில் தங்கள் குடும்பத் தொழில் பாதிக்கப்படுமோ என்றும், கூட்டணி காங்கிரஸ் உறவுக்காக, தமிழகத்திற்கு மீண்டும் ஒரு துரோகத்தை அரங்கேற்ற நினைக்கிறார்.
காவிரி மேலாண்மை ஆணையம், அதன் பணி வரம்புக்கு அப்பாற்பட்டு, மேகதாது அணை குறித்த பொருளை, 28வது ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கொண்டது, நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக, ஆணையத்தின் தலைவர் அந்தப் பொருளை அனுமதித்ததோடு, அதை மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு.
இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை, கவனமாக அனுப்பிவைத்து அதை எதிர்க்காமல், தமிழகத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க, தி.மு.க., அரசு அனுமதித்தது மிகப்பெரிய துரோகமாகும்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்தின் 20 மாவட்டங்களில், குடிநீர் பிரச்னை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் விவசாயத்திற்கு தண்ணீரின்றி பாலைவனமாகும். மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தவறினால், தமிழகத்திற்கு துரோகம் செய்யத் துணியும், கர்நாடக காங்கிரஸ் அரசையும், கைகட்டி வேடிக்கை பார்க்கும், மத்திய, மாநில அரசுகளையும் கண்டித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி, அ.தி.மு.க., அறப்போராட்டத்தை முன்னெடுக்கும்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கர்நாடக அரசின் அறிவிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதோடு, தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
எனவே, முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும், கர்நாடக அரசை கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசிடம் முறையிடவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.