தமிழ் பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது
தமிழ் பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருது
ADDED : நவ 09, 2024 01:35 AM

சென்னை:சென்னை பல்கலை முன்னாள் தமிழ் பேராசிரியர் செல்வராசனுக்கு, கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மறைந்த கருணாநிதி தன் சொந்த நிதி, ஒரு கோடி ரூபாயை, வைப்புத் தொகையாக வைத்து, கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை, 2008ல் நிறுவினார். அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும், 'கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கப்படுகிறது.
விருதாளருக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் மற்றும் கருணாநிதி சிலை வழங்கப்படும்.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் போன்ற துறைகளில் செம்மொழி தமிழாய்வுக்கு, சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024ம் ஆண்டு விருதுக்கு, சென்னை பல்கலை முன்னாள் தமிழ் பேராசிரியர் செல்வராசன் தேர்வு செய்யப்பட்டார்.
இவர், 'பாரதிதாசன் ஒரு புரட்சி கவிஞர்' என்ற பொருளில், சென்னை பல்கலையில் ஆய்வு நடத்தி, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்நுாலுக்கு, தமிழ் வளர்ச்சித் துறை, முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி உள்ளது.
அவருக்கு கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை, முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலர் முருகானந்தம், செய்தித்துறை செயலர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் சுதா சேைஷய்யன், இயக்குனர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.