ADDED : பிப் 23, 2024 02:18 AM
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணாதுரை நினைவிடம் ஆகியவை, வரும் 26ம் தேதி திறக்கப்பட உள்ளன.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - எழிலன்: சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கும் பணி எப்போது முடிவடையும்; அங்கு வள்ளுவர் குறித்த சர்வதேச ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா?
அமைச்சர் எ.வ.வேலு: வள்ளுவர் கோட்டம், 80 கோடி ரூபாயில் புனரமைக்கப்படுகிறது. ஒலி, ஒளி வசதி ஏற்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 30க்குள் முடிக்க வேண்டும். ஆனால், பணிகளை விரைவாக முடித்து, விரைவில் முதல்வர் திறக்க உள்ளார். சர்வதேச ஆராய்ச்சி நிலையம் அமைப்பது குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
எழிலன்: கருணாநிதி நினைவிடம் எப்போது திறக்கப்படும்?
முதல்வர் ஸ்டாலின்: கருணாநிதி நினைவிடமும், புதுப்பிக்கப்பட்ட அண்ணாதுரை நினைவிடமும், வரும் 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. இதை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்த முடிவெடுத்திருக்கிறோம்.
இந்நிகழ்ச்சியில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி என, எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க வேண்டும். தமிழக மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.