காஷ்மீர் சுற்றுலா ஆர்வம் குறையவில்லை; தள்ளிவைக்க தான் கேட்கின்றனர்: சுற்றுலா முகவர்கள் கருத்து
காஷ்மீர் சுற்றுலா ஆர்வம் குறையவில்லை; தள்ளிவைக்க தான் கேட்கின்றனர்: சுற்றுலா முகவர்கள் கருத்து
ADDED : ஏப் 25, 2025 06:09 AM

மதுரை : காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் தென் மாவட்டங்களில் இருந்து காஷ்மீர் செல்லும் சுற்றுலா பயணிகளின் ஆர்வம் குறையவில்லை, ஆனால் பயணத்தை தள்ளிவைக்க சொல்லி கேட்போர் அதிகரித்துள்ளனர்.
பிப்ரவரி முதலே காஷ்மீருக்கான சுற்றுலா சீசன் துவங்கிவிடும். மே, ஜூனில் அதிகம் பேர் விரும்பிச் செல்வர். சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகினர். இதையடுத்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்தோர் சென்னை வந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்த சம்பவத்தால் காஷ்மீர் சுற்றுலாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: மதுரை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 55 டிராவல் ஏஜன்சிகள் தென்தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கத்தில் உள்ளோம். கடந்த டிசம்பரில் 90 பேர், இந்தாண்டு ஜனவரியில் 100பேர், ஏப்ரலில் 70 பேர் காஷ்மீர் சென்று வந்துள்ளனர்.
மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யும் பயணிகளுக்கு மதுரையில் இருந்து டில்லி, அங்கிருந்து ஸ்ரீநகர் என்று விமான டிக்கெட் பதிவு செய்கிறோம். எங்களின் சுற்றுலா திட்டத்தில் பஹல்காம் பிரதான இடமாக உள்ளது. ஏப்ரலில் பல குழுவினர் சென்றனர். மற்றொரு குழுவினர் பஹல்காம் சம்பவத்திற்கு பின் சென்னை திரும்பினர்.
மே மாதத்தில் 3 குழுவைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் செல்ல பதிவு செய்துள்ளனர். பயங்கரவாத சம்பவத்தால் பயந்து காஷ்மீர் பயணத்தை யாரும் கைவிட வில்லை என்றாலும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கச் சொல்லி கேட்கின்றனர்.
காஷ்மீர் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இதுவரை மத்திய சுற்றுலா அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பவில்லை. இது சீசன் நேரம் என்பதால் பயணம் தள்ளிப்போவது சற்று கவலையாக உள்ளது. சுற்றுலா முகவர்களின் வாழ்வாதாரம் பாழாகி விடும்.
பயணதேதி மாற்றம் என்றாலும் கேன்சல் செய்தாலும் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்கவும் தயாராக உள்ளன. காஷ்மீரில் நமக்கு பாதுகாப்பு இன்னமும் அதிகமாகி விட்டதால் பயணத்தை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்பதால் தினமும் காஷ்மீர் சுற்றுலா திட்டம் குறித்து கேட்போரும் அதிகரித்துள்ளனர். அடுத்தடுத்து செல்லும் காஷ்மீர் திட்டத்தில் பஹல்காம் சுற்றுலாத்தலம் இடம் பெறும் என்றனர்.