ADDED : பிப் 16, 2024 01:03 AM

சென்னை:எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கயல் தினகரன், 88; வயது மூப்பால் காலமானார்.
தேவக்கோட்டையை சேர்ந்தவர் கயல் தினகரன். பத்தாம் வகுப்பு படித்த இவர், இலக்கிய ஆர்வம் உள்ளவர். கவிஞர் கண்ணதாசனின் நண்பர். கண்ணதாசன், 'தென்றல்' பத்திரிகையை நடத்திய போது, இவரை துணை ஆசிரியராக நியமித்தார்.
பின், முரசொலி, முத்தாரம், மறவன் போன்ற இதழ்களில் துணை ஆசிரியராக பணியாற்றினார். குங்குமம் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர், சென்னை மாவட்ட நுாலக ஆணைக்குழு தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் திரு.வி.க., விருது, தி.மு.க., அறக்கட்டளையின் கலைஞர் விருது உள்ளிட்டவற்றை பெற்றவர். சென்னை, கே.கே.நகரில் வசித்து வந்த இவர், வயது மூப்பு காரணமாக காலமானார்.
இவருக்கு, சாந்தா என்ற மனைவி, தமிழ்ச்செல்வன், செழியன் எனும் மகன்களும் உள்ளனர்.