பேசும் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்: சதுரங்க வேட்டை பாணியில் மோசடி செய்த 6 பேர் கைது!
பேசும் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்: சதுரங்க வேட்டை பாணியில் மோசடி செய்த 6 பேர் கைது!
ADDED : ஜன 24, 2025 09:30 PM

தேனி: சிலைக்கு அபூர்வ சக்தி உள்ளதாகவும், வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்றும் தேனியை சேர்ந்த பக்தருக்கு ஆசை காட்டி, ஒரு கோடி ரூபாய்க்கு சிலை விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி சுக்குவாடன்பட்டியை சேர்ந்த பக்தர் ஒருவரை, 6 பேர் கொண்ட கும்பல் அணுகி ஆசை வார்த்தை கூறியது. 'எங்களிடம் உள்ள சாமி சிலைக்கு பூஜை செய்தால், அது உங்களிடம் பேசும்; அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்' என, சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல பேசியுள்ளனர்.சிலையை ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசி ஐந்தாயிரம் ரூபாய் முன்பணமும் பெற்றுள்ளனர்.எனினும் அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லாத அந்த பக்தர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில் சிலையை விற்பனை செய்வதற்காக வந்த மதுரை மாவட்டம் பேரையூர் ஆத்தாங்கரைப்பட்டியை சேர்ந்த தங்கமணி( 41), ஆ.கல்லுப்பட்டியை சேர்ந்த சிவா(29), டி. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்களான சம்பழகு(29), சூர்யபிரகாஷ்(21), மற்றும் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியை சேர்ந்த பாலமுருகன்(35) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ரவிச்சந்திரன்(52), ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
மோசடிக்கு பயன்படுத்திய சிலை, கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.சிலை எந்த உலோகத்திலானது என மதுரை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

