தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
ADDED : டிச 18, 2024 05:39 PM

சென்னை: தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.
கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர். நேற்று முன்தினம் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதனை அகற்றுவதற்கான செலவை கேரள அரசு ஏற்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.