குற்றவாளிக்கு காட் பாதராக மாறிய கேரளா போலீஸ் காங்., தேசிய பொதுச் செயலாளர் பேச்சு
குற்றவாளிக்கு காட் பாதராக மாறிய கேரளா போலீஸ் காங்., தேசிய பொதுச் செயலாளர் பேச்சு
ADDED : ஜன 09, 2024 02:54 AM

மூணாறு: ''கேரள மாநில போலீசார் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்காமல் குற்றவாளிக்கு காட்பாதராக மாறியுள்ளனர்,'' என, வண்டிபெரியாறில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் குற்றம்சாட்டினார்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகே சுரக்குளம் எஸ்டேட்டில் ஆறு வயது சிறுமியை 2021 ஜூன் 30ல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூனை 24, விடுவித்து கட்டப்பனை அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் டிச.,14 உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்தன. காங்., கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில் பதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தாத்தா ஆகியோரை ஜன.,6ல் அர்ஜூன் உறவினர் பால்ராஜ் கத்தியால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் மாநில குழு தலைமையில் வண்டிபெரியாறில் நேற்று முன்தினம் பெண்கள் ஜூவாலை எனும் கண்டன ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடந்தது.
இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
பொதுக்கூட்டத்திற்கு கேரள மாநில காங்., துணைத்தலைவர் சஜிந்திரன் தலைமை வகித்தார். தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் தொடங்கி வைத்தார். தேசிய செயலாளர் விஸ்வநாதன்பெருமாள், கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவர் சதீசன், எம்.பி.,க்கள் டீன் குரியாகோஸ், ஆன்டோஆன்டணி, ஜெபிமேத்தர், எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்தை சேர்ந்த விஜயராணி, மாத்யூகுழல்நாடன், உமாதாமஸ், ரோஜி எம்.தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் பேசுகையில், ''பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டிய முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு கவசம் அமைத்து கொடுத்தார். பினராயின் போலீஸ் குற்றவாளிக்கு 'காட் பாதர்' ராக மாறினர்.
அதனால் சிறுமியின் தந்தையை தாக்குவதற்கு அரசின் உதவியுடன் குற்றவாளியின் குடும்பத்தினருக்கு தைரியம் வந்தது,'' என்றார்.