ஆந்திர மதுபான ஊழல் வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ஆந்திர மதுபான ஊழல் வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
ADDED : செப் 20, 2025 02:14 AM
சென்னை:ஆந்திரா மாநிலத்தில் நடந்த, 4,000 கோடி ரூபாய் மதுபான ஊழல் தொடர்பாக, தமிழகம் உட்பட, 20 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 38 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில், 2019 - 2024 மே வரை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது, தனியாரிடம் இருந்த மதுக்கடைகள், ஆந்திர பிரதேச மதுபானக் கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இக்கழகத்திற்கு தேவையான மதுபானங்களை, பிரபலமில்லாத தனியார் மது உற்பத்தி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ததில், 4,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
மதுபான ஊழலில், முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஊழல் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த ஊழல் தொடர்பாக, நேற்று முன்தினம், தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், தெலுங்கானாவில் ைஹதராபாத், கர்நாடகாவில் பெங்களூரு என, எட்டு மாநிலங்களில், 20 இடங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, கணக்கில் வராத, 38 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவித்துள்ளனர். மேலும், மதுபான ஊழலில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளன. இதற்காக, மதுபான அதிபர்கள், நகை கடைகளுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

