இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: 5 அடுக்கு பாதுகாப்பு.. பயணத்திட்டம் என்ன?
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: 5 அடுக்கு பாதுகாப்பு.. பயணத்திட்டம் என்ன?
UPDATED : ஜன 19, 2024 05:39 AM
ADDED : ஜன 18, 2024 12:46 PM

சென்னை: 3 நாள் பயணமாக இன்று (ஜன.,19) பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவர் திருச்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்கிறார். சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் இன்று(ஜன.,19) மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர், அவர் நேரு ஸ்டேடியத்தில் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (ஜனவரி 20) காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திருச்சி வருகிறார். பின்னர் அவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ராமேஸ்வரம் புறப்படுகிறார். பிற்பகலில் ராமேஸ்வரத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார்.
அதன் பின் கோயிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். ஜன.,20ம் தேதி இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார். ஜன.,21ம் தேதி காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டில்லி புறப்படுகிறார்.
அதன் பின்னர், 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருச்சியில் 20ம் தேதி வரை என 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆய்வு
பிரதமர் மோடி வருகையை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ராமநாதசுவாமி கோயிலில் வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.