UPDATED : ஜன 21, 2024 01:41 AM
ADDED : ஜன 19, 2024 11:32 PM

சென்னை: சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனையர் பதக்கங்களை குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் ஒன்று 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டு போட்டிகள். இதில், 17 மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்ய, தேசிய அளவிலான போட்டிகளை நடத்தி, அதில் தேர்வாகும் வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை 2018ல் பிரதமர் மோடி வடிவமைத்தார். இதுவரை ஐந்து மாநிலங்களில் போட்டிகள் நடந்து உள்ளன. சென்னையில் நடந்த 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமரிடம், 'கேலோ இந்தியா' போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளிக்கும்படி முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் கோரிக்கை வைத்தனர். அதை பிரதமரும் ஏற்றார்.
அதன்படி, சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ போட்டிகளை நேற்று பிரதமர் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்குர், இணையமைச்சர் நிசித் பிரமாணிக பங்கேற்றனர்.
நடக்கும் இடங்கள்
நான்கு மாதங்களாக, இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. சென்னை தவிர திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் போட்டிகள் நடப்பதால் அந்நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட 25 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
36 மாநிலங்கள்
இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 5,500 வீரர், வீராங்கனைகள், 1,600 பயிற்சியாளர்கள், 1,000 நடுவர்களும் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு உதவ 1,200 தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
'விளையாட்டு தலைநகராக தமிழகத்தை உயர்த்த இலக்கு!'
முதல்வர் ஸ்டாலின்: சென்னை நேரு விளையாட்டரங்கில், விரைவில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் துவங்கப்பட உள்ளது. மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் சிலர், கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் கேலோ இந்தியா போட்டி நடப்பது, எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சேர்க்கப்பட உள்ளது. கேலோ இந்தியா 2023 'லோகோ'வில், திருவள்ளுவர், வீரமங்கை வேலு நாச்சியார் இடம்பெற்றுள்ளது, தமிழகத்திற்கு கூடுதல் பெருமை.
விளையாட்டையும் வளர்ச்சியின் இலக்காக கருதி செயல்பட்டு வருகிறோம். சுயமரியாதை, தன்னம்பிக்கையை மேம்படுத்தி, எல்லாருடைய நல்வாழ்வுக்கும் விளையாட்டு உதவுகிறது. அன்பு பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கு உண்டு.
விளையாட்டுத் துறையில் தமிழகத்தை, உலக அளவில் கவனம் ஈர்க்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என, அமைச்சர் உதயநிதியை கேட்டுக் கொள்கிறேன்.
'இந்தியாவில் ஒலிம்பிக்!'
மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாகூர்: கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகள், ஆசிய போட்டி, காமன்வெல்த் போன்ற சர்வதேச போட்டிகளில், இந்திய வீரர்கள் சாதனை படைக்க அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளன.
எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை, இந்திய வீரர்கள் வென்றனர். அதில 41 வீரர்கள், கேலோ இந்தியா வாயிலாக அடையாளம் காணப்பட்டவர்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கேலோ இந்தியா போட்டிகள், பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த கனவு திட்டம்.
வரும் 2030ல், இளையோர் ஒலிம்பிக் போட்டியையும், 2036ல் கோடைகால ஒலிம்பிக் போட்டியையும், இந்தியாவில் நடத்த பிரதமர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
'புது வரலாறாக மாறும்'
அமைச்சர் உதயநிதி: தமிழகத்தை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற, முதல்வர் உழைத்து வருகிறார். அதற்காக பல்வேறு திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில் உள்ள செஸ் வீரர், வீராங்கனையரில், நான்கில் மூவர் தமிழர்களாக உள்ளனர்.தமிழக வீரர், வீராங்கனையர் தடகளம் உள்ளிட்ட போட்டிகளிலும் சாதித்து, நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர். பொதுவாக கல்வியை முதன்மை தகுதியாகவும் விளையாட்டை இதர தகுதியாகவும் குறிப்பிடுவர். நம் முதல்வர், விளையாட்டை இணை தகுதியாக நிர்ணயித்தார்.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கிராம பஞ்சாயத்துகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க உள்ளோம். கேலோ இந்தியா போட்டிகளில், 6,000 வீரர்கள் பங்கேற்க உள்ளளனர். இது புது வரலாறாக மாறும்.