நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி: கேலோ இந்தியா போட்டி அழைப்பிதழை வழங்குகிறார்
நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி: கேலோ இந்தியா போட்டி அழைப்பிதழை வழங்குகிறார்
ADDED : ஜன 03, 2024 10:01 AM

சென்னை: தமிழகத்தில் ஜன.,19 முதல் 31 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை, அமைச்சர் உதயநிதி நாளை (ஜன.,4) சந்திக்க உள்ளார்.
அரசின் திட்டத்தின் கீழ் 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. 2021ல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் ஹரியாணா மாநிலம், பஞ்சகுலாவிலும், 2022ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலிலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க உள்ளார். இன்று (ஜன.,3) இரவு டில்லி செல்லும் உதயநிதி, நாளை பிரதமர் மோடியை சந்தித்து கேலோ இந்தியா போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்க உள்ளார். அதேபோல் மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளார்.