வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: 24 மணிநேரத்தில் பெங்களூருவில் மீட்ட போலீஸ்: 4 பேர் கைது
வேலூரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: 24 மணிநேரத்தில் பெங்களூருவில் மீட்ட போலீஸ்: 4 பேர் கைது
ADDED : ஆக 01, 2024 10:53 AM

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூலை 31) கடத்தி செல்லப்பட்ட ஆண் குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்டதுடன், கடத்திய பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்த கோவிந்தன் - சின்னு தம்பதிக்கு கடந்த ஜூலை 27ல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழுந்தை பிறந்துள்ளது. நேற்று (ஜூலை 31) காலையில் தாய் சின்னு உணவருந்திக் கொண்டிருந்தபோது குழந்தை அழுதுள்ளது. அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாக கூறி வாங்கியுள்ளார்.
சிறிது நேரத்தில், குழந்தையையும், அந்த பெண்ணையும் காணாததால் தாய் சின்னு அதிர்ச்சியடைந்தார். குழந்தை கடத்தப்பட்டது உறுதியான நிலையில், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, நீல நிற புடவை கட்டிய பெண் ஒருவர் சுமார் 10 வயதுள்ள சிறுவனுடன் வந்து ஒரு பையில் குழந்தையை வைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இன்று, குழந்தையை கடத்தி சென்ற வேலூர் மாவட்டம் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர், கர்நாடகாவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததாகவும், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளருக்கு கொடுப்பதற்காக குழந்தையை கடத்தியதாகவும் கைதான பெண் வாக்குமூலம் அளித்தார். கடத்தல் தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரையும் வேலூருக்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர்.