ADDED : நவ 09, 2024 11:08 PM
திருநெல்வேலி:தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் உதயகுமாரை 32, காரில் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குருசாமிபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் கடையம் வெங்கடாம்பட்டியில் ரைஸ்மில் நடத்தி வருகிறார். நெல் வியாபாரமும் செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சூரியகுமாரிடம் 31, ரூ.98 லட்சத்திற்கு நெல் கொள்முதல் செய்திருந்தார். ரூ.77 லட்சம் கொடுத்துள்ளார்.
மீதத்தொகையை வழங்க வேண்டும். பாக்கியை தொடர்ந்து தராததால் பண்ருட்டி சூரியகுமார், சுரேஷ் 39, கடலூர் ஹரி கிருஷ்ணன், விராலி மலை பிரதீபன் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் பாவூர்சத்திரம் சென்று உதயகுமாரிடம் பாக்கியை கேட்டனர். அவர் தராததால் அவரை காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து உதயகுமாரின் தந்தை அன்பழகன் கடையம் போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி தனிப்படையினர் கடலூர் சென்றனர். பெரம்பலூர் அருகே அவர்களின் கார் நிற்பதை சிக்னல் மூலம் அறிந்த போலீசார் காருடன் உதயகுமாரை மீட்டனர். அவரை கடத்திய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.