சிறுநீரக முறைகேடு :விசாரணை குழுவிற்கான அதிகாரிகள் நியமன விவகாரம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
சிறுநீரக முறைகேடு :விசாரணை குழுவிற்கான அதிகாரிகள் நியமன விவகாரம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
ADDED : அக் 10, 2025 10:11 PM
சிறுநீரக முறைகேடு விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில், ஏழை தொழிலாளர்களை ஏமாற்றி புரோக்கர்கள் மூலமாக, சிறுநீரகம் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. போலி ஆவணங்கள் தயார் செய்து, லட்சக்கணக்கான ரூபாய்க்கு தொழிலாளிகளிடம் சிறுநீரகங்களை வற்புறுத்தி பெற்று, விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
திருச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களிலும், சிறுநீரக திருட்டுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதில், தொடர்புடைய இரண்டு மருத்துவமனைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
'இந்த இரண்டு மருத்துவமனைகளும், தி.மு.க., ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடக்க வாய்ப்பில்லை. எனவே சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தியேஸ்வரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்ததுடன், அதில், நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.,க்களையும் சேர்த்து உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை குழு அமைத்ததில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், விசாரணை குழுவில் இடம் பெற உள்ள அதிகாரிகளை நாங்கள் தான் தேர்ந்தெடுப்போம் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் கூறுகிறார்.
'சம்பவம் நடந்த மாவட்டத்தில் இருந்து, வெகு துாரத்தில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதன் மூலமாக நிர்வாக ரீதியான சிக்கல்கள் ஏற்படும். எனவே நாங்களே, 10 அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதிலிருந்து சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து நியமிக்கலாம்' என, வாதங்களை முன் வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மட்டும், ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகின்றன. குற்ற சம்பவம் நடந்த மாவட்டத்திற்கு அருகே உள்ள அதிகாரிகளை விசாரணை குழுவில் இணைக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் யோசனையை எங்களால் ஏற்க முடியாது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை, சி.பி.ஐ., விசாரணை தான் முதலில் கேட்கப்பட்டது. ஆனால், பல்வேறு விஷயங்களையும் ஆராய்ந்து தான் சென்னை உயர் நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -