கிட்னிகள் ஜாக்கிரதை: சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எம்ஏக்கள்!
கிட்னிகள் ஜாக்கிரதை: சட்டசபைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எம்ஏக்கள்!
UPDATED : அக் 16, 2025 11:57 AM
ADDED : அக் 16, 2025 11:22 AM

சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று (அக் 16)அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்று எழுதி இருந்த பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் அக் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 3வது நாளான இன்று (அக் 16) சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்று எழுதி இருந்த பேட்ச் அணிந்து வந்திருந்தனர். கிட்னி மோசடியில் உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசை கண்டிப்பதாக கூறி, இந்த பேட்ஜ் அணிந்து இருப்பதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
கிட்னி திருட்டு: மா.சு விளக்கம்
கிட்னி திருட்டு புகார் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
சிறுநீரக அறுவை சிகிச்சை முறைகேடாக நடந்துள்ளது என எழுந்த பிரச்னை குறித்து, விரிவான பதிலை அவையில் தெரி விக்கிறேன். 19.7.2025 அன்று செய்திகளில் சிறுநீரக முறைகேடு நடந்ததாக வந்துள்ள புகார் குறித்து, முதல்வர் ஸ்டாலின் பார்த்த உடனே நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது. சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிப் பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டது. இடைத்தரகர்கள் ஸ்டாலின் மோகன், ஆனந்த் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெரம்பலூர் தனியார் மருத்துமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எந்த மருத்துவமனையாக இருந்தாலும், யாருடையதாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தை மறுசீரமைத்துள்ளோம். இந்த புகாரில் அரசு அதிகாரிகள் 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.
கூட்டத்தொடரின் 2ம் நாளான நேற்று (அக் 15) கரூர் உயிர்பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்னி திருட்டு சம்பவம் பின்னணி?
நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன.
ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த முறைகேடு பற்றி விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை ஐகோர்ட் மதுரைக்கிளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.