ADDED : ஆக 20, 2025 04:17 AM

புதுடில்லி: 'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, நாடு முழுதும் ஆன்லைன் சூதாட்டங்கள் வாயிலாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆகையால், மோசடிக்கு காரணமான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மீது புலனாய்வு அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயத்தை ஊக்குவிப்பதை தடுக்கவும், அதன் விளம்பரங்களை தடை செய்யவும் சட்டம் இயற்ற மத்திய அரசு முன்மொழிந்தது.
அதன் அடிப்படையில், மசோதாவின் வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. பெட்டிங், பந்தயம் தொடர்பான சூதாட்டத்தை கொண்ட செயலிகளைக் கட்டுப்படுத்துவதே, இதன் நோக்கம். இதுபோன்ற செயலிகளை கட்டுப்படுத்தவும், தடை விதிக்கவும் மத்திய அரசுக்கு இந்த மசோதா அதிகாரம் தருகிறது.
இந்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, லோக்சபாவில் ஆன்லைன் கேமிங் ஒழுங்குபடுத்துதல் மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ஆன்லைன் சூதாட்டம் இனி தண்டனைக்குரிய குற்றமாக மாறவுள்ளது. இளைஞர்களைப் பாதுகாக்கும் நோக்குடனும், பந்தயம் அல்லது சூதாட்டம் தொடர்பான ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்த இந்த மசோதா வாயிலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.